- அஇஅதிமுக
- தவெகா
- ராஜேந்திர பாலாஜி
- சிவகாசி
- முன்னாள்
- அமைச்சர்
- சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
- தூத்துக்குடி படப்பிடிப்பு சம்பவம்
- கரூர்
சிவகாசி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தையும் ஒப்பிடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல் கேலி செய்வது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது தவெக கட்சிக்கு நல்லதல்ல. திமுகவிற்கும் தவெகவிற்கும்தான் போட்டி என கூறுவது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு கிடக்கிறது என்பது போல உள்ளது.
ஒரு தெருமுனை பிரசாரத்தில் கூட அதிமுகவுக்கு எத்தனை தொண்டர்கள் வருவார்கள் என்று தெரியும். ஒவ்வொரு தெருக்களிலும் விசாரித்தால் தெரியும், யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. தவெகவின் தண்டவாளம் வண்டவாளம் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும். யார் ஜெயிக்கப் போகிறார்கள், யார் ஆளப்போகிறார்கள், யார் கீழே விழுகிறார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும். அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த வகையில் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் பேச்சுவார்த்தை நடந்தது போன்று தெரியவில்லை. கூட்டணிக்காக எடப்பாடி யார் வீட்டு கதவையும் தட்டக் கூடியவர் அல்ல. இன்னும் பல பேர் வந்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு எடப்பாடி தயாராக உள்ளார். அதற்காக யாரிடமும் போய் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அதிமுக பலவீனமாக இல்லை. தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிகள் தான் களத்தில் நின்று களமாடும். மற்றவை எல்லாம் சிதறி ஓடிவிடும். யானை மேல் உட்கார்ந்து போவதால் நான்தான் ராஜா என்று சிலர் கூறுவார்கள்.
யானை துதிக்கையால் லேசாக தட்டி விட்டு சென்றால் காணாமல் போய்விடுவார்கள். எடப்பாடி பலமாகத்தான் உள்ளார். இதை எங்கள் கூட்டணிக்கு வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சி விஷயத்தில் திமுக நிலைப்பாட்டைதான் அதிமுகவும் கையாளும். திமுகவைப் போல, அதிமுகவும் ஆட்சியில் பங்கு கொடுக்காது. எடப்பாடி கூட்டணி சேர்ப்பது எங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே தவிர, நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. இதை எங்களோடு கூட்டணிக்கு வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
