×

கூட்டணியா? போனுல பேசிட்டு இருக்கேன்: ராமதாஸ் குசும்பு

திண்டிவனம்: சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு கடந்த ஜனவரி 9ம்தேதி முதல் 14ம்தேதி வரை பெறப்பட்டன. இதில் 4,109 மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தலைமையில் தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் நேர்காணல் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இன்று மற்றும் நாளை மறுநாள் மீதமுள்ள மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யவில்லை, விரைவில் முடிவு செய்வோம் கூட்டணி தொடர்பாக தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினோம். நடத்தி வருகிறோம்.’’ என்றார். கடந்த காலங்களில் போட்டியிட்டு வென்ற இடங்களில் இந்த முறையும் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘நம்பிக்கை அடிப்படையில்தான் உலகமே இயங்குகிறது’’ என்று பதிலளித்தார்.

* மாம்பழ சின்னம் விரைவில் முடிவு: ஜி.கே.மணி
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: கூட்டணி தொடர்பாக முடிவுகளை எடுக்க காலதாமதம் ஆவதற்கு காரணம், ராமதாஸ் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக அலசி, ஆராய்ந்து யோசனை செய்து வருகிறார். சில கட்சிகள் தலைமையுடன் நேரடியாக பேசுவார்கள், சில சமயங்களில் நபர்கள் மூலம் பேசுவார்கள் இயல்பானது. இறுதி முடிவை ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணி அமைப்பதில் வெற்றி கூட்டணியை கண்டறிவதை தவிர வேறு எந்த சிக்கலும் இல்லை. மாம்பழ சின்னம் குறித்து மிகவிரைவில் தெளிவான முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, ‘‘அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. தேர்தல் நேரத்தில் நம்முடைய கருத்து சிக்கலை ஏற்படுத்தக் கூடாது. நல்ல கூட்டணி அமைக்க வேண்டும். கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சேர வேண்டுமென நினைப்பதில் முதல்ஆள் நான்தான். கனத்த இதயத்தோடு வாழ்ந்து வருகிறேன்’’ என்றார்.

Tags : Alliance ,Ramadoss Kusumbu ,Tindivanam ,PMK ,Tamil Nadu ,Puducherry ,Ramadoss… ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை