திருமயம் அருகே ஜல்லிக்கட்டு: 760 காளைகள் சீறிப்பாய்ந்தது

திருமயம்,ஜன.30: திருமயம் அருகே தைபூச திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 5வயது சிறுவன் உட்பட 30 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையகோயில் காளீஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி தைபூச திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கோயில் அருகே உள்ள ஜல்லிகட்டு திடல் கடந்த ஒரு வாரமாக மாவட்ட அதிகாரிகள், திருமயம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் பேரிகாட் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வந்தது. இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் ஜல்லிகட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிங்கம்புணரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 760 காளைகள் கலந்த கொண்டன. சீறிவரும் காளைகளை அடக்க 164 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். முதலில் உள்ளூர் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகள் ஒவ்வவொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

அவ்வாறு அவிழ்க்கப்பட்டு சீறி வரும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் காளை முட்டியதில் கோபாலகிருஷ்ணன், ராசு, முருகாந்தம், லோகேஷ், கணேசன், கருப்பையா என்ற 5 வயது சிறுவன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லேசான காயமடைந்தவர்கள் நற்சாந்துபட்டி அரசு மருத்துவமனையிலும் பலத்த காயமடைந்த மாயாண்டி, விஸ்வா, சுறாமீன் ஆகியோர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிகட்டு நிகழ்ச்சியைகான சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான ரசிகர்கள் வந்திருந்தனர்.

Related Stories: