- யூனியன் அரசு
- யூஜிசி
- தமிழ்நாடு மாணவர் இயக்கக் கூட்டமைப்பு
- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- ஆர். ராஜீவ் காந்தி
- டி. ஷம்சீர் அகமது…
சென்னை: யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கான தடையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்காமல் உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ராஜீவ்காந்தி, தௌ.சம்சீர் அகமது ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் உயர்கல்வி நிலையங்களுக்குள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூகங்களைச் சார்ந்த இருபால் மாணவர்கள் நுழைந்திருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சக மாணவர்களிலேயே உயர் சாதியினர் என்போராலும், ஆசிரியப் பணியாளர்களாலும், கல்வி நிறுவன நிர்வாகத்தினராலும் சொல்லொணாத் துயரங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும், திட்டமிட்ட நெருக்கடிகளுக்கும் காலதாமதங்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
ஏழை, எளிய, கிராமப்புறப் பின்புலங்களிலிருந்தும், முதல் தலைமுறையாகவும், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த தொல்லைகளை தாங்க முடியாமல் தங்களையே மாய்த்துக் கொள்ளும் கொடுமை தொடர் கதையாகியிருக்கிறது. இந்தச் சூழலில், மாணவர் அமைப்புகளின் தொடர் குரலுக்கும், கல்வியாளர்களில் சமூகநீதி உணர்வு படைத்தவர்களின் வேண்டுகோளுக்கும் பயன் கிடைத்தது போல, யுஜிசி புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. அவ்விதிகளின்படி பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான கல்வி நிறுவனப் பாகுபாடுகளைக் களைவதற்கான நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், அதற்கெதிராக உயர்சாதி மாணவர்கள் அவசியமற்ற பிரச்னையை உருவாக்கி, அவ்விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் அவசர இடைக்கால தடை வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தீர்ப்பு அதிர்ச்சி தரக்கூடியதாகும். சமூகநீதியை மறைமுகமாக நசுக்குவதற்காக உயர் சாதியினர் தொடர்ந்து செய்துவரும் அநீதிகள், சட்டமீறல்கள், விதிமீறல்கள் குறித்து ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் அவசர,அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியமென்ன என்பது நமக்கு விளங்கவில்லை. நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம், நீங்கள் அழுவது போல் அழுங்கள் என்று ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக இதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்வு காணவேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பாதுகாப்புக்கு இவ்விதிகள் அவசியம் என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
