- முதல் அமைச்சர்
- கோட்டூர்புரம்
- அமைச்சர்
- டி. எம். அன்பராசன்
- சென்னை
- சைதாப்பேட்டை
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: குடிசை பகுதியில் வாழும் மக்கள் கான்கிரீட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் கலைஞர் குடிசை பகுதி மாற்று வாரியம் 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட குடியிருப்பின் அளவு 216 ச.அடி அளவாகும். அன்றைய தினம் தரை மற்றும் 2 தளங்களுடன் 1476 குடியிருப்புகள் கட்டப்பட்டது.
இப்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 216 ச.அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைந்தது 400 ச.அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து குடியிருப்புகளும் 400 ச.அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன. 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டப்பகுதியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகின்ற 2026 பிப்ரவரி 20ம் தேதிக்குள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு இங்கு இருந்த குடும்பங்களுக்கு மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வரின் பயனாளிகளின் பங்கு தொகையை ரூ.1.50 லட்சமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் மாத தவணையில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் இன்னும் 5 நாட்களில் சென்னையில் 5 திட்டப்பகுதிகள், மற்ற மாவட்டங்களில் 11 திட்டப்பகுதிகள் மொத்தம் 16 திட்டப்பகுதிகளில் ரூ.1238 கோடி மதிப்பீட்டில் 9696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்க உள்ளார். வாரியத்தால் சென்னையில் 1,36,946 குடியிருப்புகளும், மாவட்டங்களில் 96,836 குடியிருப்புகளும் மொத்தம் 489 திட்டப்பகுதிகளில் 2,33,782 குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் 27628 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இன்று வரை 55,039 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த கால ஆட்சியில் 6417 குடியிருப்புகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 5 வருடத்தில் 60,493 குடியிருப்புகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
