சென்னை: அரசுப் பள்ளித் தூதுவர் திட்டம் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆளுமைகள் உருவாக வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை அசோக்நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் ரூ.11 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா, அரசுப் பள்ளி தூதுவர் திட்டத் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பள்ளித் தூதுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்டவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். பின்னர், பள்ளித் தூதுவர்கள் பதவியேற்பு உறுதிமொழியில் கையொப்பமிட்டும், ‘விழுதுகள் விருதுகளை’ வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என்று கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் நான் பதலளித்து பேசியது இன்று நாட்டு மக்களிடம் பறைசாற்றும் வகையில் இந்த துறை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த பள்ளியில் அரசுத்தூதர்கள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.
இங்கு வாழ்த்திப் பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டத்தைப் போல காலை உணவுத் திட்டம் என்ற ஒரு திட்டம் வருவதற்கு காரணமே இந்த அசோக்நகர் பள்ளிதான் என்ற பெருமை இந்த பள்ளிக்கு உண்டு. அப்படிப்பட்ட பள்ளியில் அரசுத் தூதுவர்களாக வந்துள்ளவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். நல்ல நிகழ்வு அதனால் நாங்கள் வந்து கலந்துகொள்கிறோம் என்று இந்த ஆளுமை மிக்கவர்கள் தெரிவித்து, இதற்காக நேரம் ஒதுக்கி இங்கு வந்துள்ளனர். அது பள்ளிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இங்கே பேசிய ஆளுமைகளான இஸ்ரோவின் தலைவர் நாராயணன், இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்த அனுபவங்களை நாங்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளோம்.
வரும் காலங்களில் அதை நாங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். இங்கு வந்துள்ள ஆளுமைகள் போல ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற ஆளுமைகள் உருவாக வேண்டும். விளையாட்டுத்துறையை எடுத்துக் கொண்டால் மாணவர்களும் அதில் சாதிக்க தூதுவர் திட்டம் உதவும். அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசினார். விழாவில், அரசுப் பள்ளி தூதுவர்களான மாநில திட்டக் குழுவின் செயல்துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இஸ்ரோவின் தலைவர் நாராயணன், இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
