செய்துங்கநல்லூர் : முறப்பநாடு தெருக்களில் தேங்கி நின்ற கழிவுநீர், தினகரன் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது.வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த தெருவில் வீடுகளில் உள்ள கழிவுநீர் உறிஞ்சி கிணறுகளில் பராமரிப்பு இல்லாமல் கழிவுநீர் நிரம்பி தெருக்களில் தேங்கி நின்றது.
நீண்ட நாட்களாக இந்த கழிவுநீர் கிடப்பதால் அதிகமாக பொதுமக்கள் கூடும் பகுதிகளாக உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் வயதானவர்கள் கழிவு நீரில் மிதித்து விடாமல் செல்வதற்காக தாண்டி செல்லும் போது நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்து விடும் நிலை அரங்கேறியது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் காணப்பட்டது.
இதுகுறித்து கடந்த 22ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது.
மேலும் வீடுகளில் உள்ள கழிவுநீர் உறிஞ்சி கிணறுகளில் இருந்து வெளியேறிய வீட்டின் உரிமையாளர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இனி இப்படி கழிவுநீர் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தெருக்களில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
