கோவை: கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களான கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் கந்தசாமி, பிஆர்ஜி. அருண்குமார், மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ், கோவை வடக்கு அம்மன் அர்ஜூனன் மற்றும் மாஜி அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, மாஜி எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் ஆகியோர் 65 வயது கடந்த சீனியர்கள். சிலர் 70 வயதை கடந்து விட்டதாக தெரிகிறது. இந்த சீனியர்கள் இளம் நிர்வாகிகளை வேலை வாங்க மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
நடக்க சிரமப்பட்டு நோயுடன் போராடி வரும் சீனியர்களின் பதவி ஆசை குறையவில்லை. தேர்தல் நேரத்தில் இவர்களால் ஓட்டுகேட்டு ஏசி வாகனங்களில் கூட சென்று வர முடியாது. இருப்பினும் நாங்க தான் தேர்தலில் நிற்போம் என தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் என ஒதுங்கி நிற்கிறார்களாம். மாவட்ட அளவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு தந்துள்ளனர்.
எடப்பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இவர்கள் பிரதானமாக கலந்துகொண்டு ஜெயித்து காட்டுவோம் என கட்டை விரல் உயர்த்தி காட்டி வந்துள்ளார்களாம். இதன் பின்னணியை விசாரித்தபோது, தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்ட இளைஞர்களை விருப்ப மனு தராமல் சீனியர்கள் தடுத்து மிரட்டி வைத்திருந்த தகவல் வெளியானது. கோவை மாவட்டத்தில் முழுவதும் ஜெயித்து விட்டதாக கடந்த 2021ம் ஆண்டில் சவால்விட்ட அதே சீனியர்கள் மீண்டும் போட்டியிட்டால் தோல்வி தான் கிடைக்கும் என கள ஆய்வில் தெரிந்து விட்டதாம்.
இதை எடப்பாடி ஐடி குழுவினரும் கண்டறிந்து தலைமைக்கு சொல்லி உள்ளனர். இதனால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெக என பல்வேறு கட்சியினரும் கோவையில் உள்ள அதிமுக சீனியர்களால் கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என கருதுகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவும், ‘‘நீங்க எல்லாம் ரொம்ப வயசானங்க, உங்களுக்கு சீட் தந்தா டென்ஷனாகி தோத்து போயிருவீங்க, ஒதுங்கி இருங்க, நாங்க பாத்துக்கறோம்’’ என அதிமுக சீனியர்களை சீண்டி ஓரங்கட்ட பார்க்கிறது. போட்டா போட்டி நிலவி வருவதால் அதிமுக பாடு திண்டாட்டமாக இருக்கிறது.
