செய்யாறு, ஜன.30: கொலை சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை(47). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முருகனை, தணிகைமலை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தணிகைமலையை கைது சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தணிகைமலை கடந்த 27ம் தேதி செய்யாறில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மொய் கவர் கொடுக்கும் இடத்தில், நின்றிருந்த முருகனின் தம்பி சுதாகர்(35), அவரது உறவினர் சீனிவாசன்(23) ஆகியோர், தணிகைமலையை, ஆபாசமாக பேசி கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த தணிகைமலை செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு சுதாகர், சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் தன்னையும், உறவினர் சீனிவாசனையும் தணிகைமலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சுதாகர் செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
