×

விஏஓ அலுவலகம் கட்ட கோரிக்கை

திருவாடானை,ஜன.30:திருவாடானை அருகே சிறுகம்பையூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டு அப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விஏஓ அலுவலகம் சேதமடைந்ததால், இடித்து அகற்றி விட்டனர். மேலும் சிறுகம்பையூர் கிராம நிர்வாக அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் சிறுகம்பையூர், பூனைக்குட்டிவயல், மயிலாடுவயல், கஞ்சக்கோன்வயல், ஆரியன்வயல், பச்சரவக்கோட்டை, நோக்கன்வயல், முடுக்குவயல், பெரிய குடியிருப்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் சாதி,வருமானம், இருப்பிடம், விதவைச்சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆண் வாரிசு இல்லா சான்று, அடையாளச் சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று உள்ளிட்ட சான்றுகளைப் பெறுவதற்காக இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினசரி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிராம நிர்வாக அலுவலகம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளையபுரம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், மாணவர்களும் அவர்களுக்குத் தேவையான சான்றுகளுக்காவும், பட்டா மாறுதல், அடங்கல், பத்து (1) உள்ளிட்டவைகளைப் பெறுவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும்போது சிரமப்படுவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் சிறுகம்பையூர் பகுதியில் பழைய அலுவலகம் இடிக்கப்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய விஏஓ அலுவலகம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VAO ,Thiruvadanai ,Sirukampayur ,Thiruvadana ,SIRUGAMBAYUR VILLAGE ,
× RELATED காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தெப்போற்சவம்