×

பிராட்வே பேருந்து நிலையம் மூடல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இன்று முதல் பேருந்து இயக்கம்

மாதவரம், ஜன.24: சென்னையின் மிக பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002ம் ஆண்டுக்கு பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. அதை தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிராட்வே பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், உயர் நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அடிப்படை வசதிகளின்றி காணப்படும் இந்த பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில்தான், பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையம் அமைப்பதற்கு ரூ.822.70 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதற்கான பணிகள் மேற்கொள்ள வசதியாக, பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் மூடப்பட்டு, ராயபுரம், தீவுத்திடல் ஆகிய 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று முதல் (24ம் தேதி) பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.

 ராயபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்: 11, 21, 26, 52, 54, 60, 10இ, 11ஜி, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இ.டி., 18ஏ, 18ஏ சியுடி, 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆர், 18ஆர் எக்ஸ், 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆர், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60எச், 88சி, 88கே, 88கே இ.டி., 9எம் இ.டி., ஏ51, டி51 இ.டி., இ18, இ51, எம்51ஆர்.
 ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 101சிடி, 101எக்ஸ், 53இ, 53பி, 71டி, 71இ, 71எச், 71வி, 120, 120சிடி, 120எப், 120ஜி, 120கே, 150.
 அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்திலும், வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, ராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
 ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
 கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 1, 4, 44, 330, 33எல், 38ஏ, 38ஜி, 38எச், 44சி, 44சிடி, 4எம், 560, 56டி இ.டி., 56ஜெ, 56கே, 56பி, 570, 57எப், 57எச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி, சி56சி இ.டி., 557ஏ இ.டி.,
 மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33பி, 56சி, 56எப்.
 ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17டி, 20ஏ, 20டி, 50இ.டி., 50எம்.
 கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரீஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
 மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
 ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலதுபுறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
 காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி என்.எஸ்.சி.போஸ் சாலை, எஸ்பிளனேடு சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
 தீவுத்திடலில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

Tags : Broadway Bus Station ,Moodall ,Royapuram ,Thivuthidal ,Madhavaram ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கூடப்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்