×

ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை மந்தம்

ஈரோடு : ஈரோடு ஜவுளிச்சந்தையில் இந்த வாரம் விற்பனை மந்தமாகவே இருந்தது.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள்.

இந்த வார ஜவுளி சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் என கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஈரோடு ஜவுளி சந்தையில், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டியுடன் விழாக்கள் நிறைவடைந்த நிலையில், 2வது வாரமாக இந்த வாரமும் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்தது. தை மாதம் முகூர்த்த தினங்களும் குறைவாகவே இருந்ததால் சில்லரை விற்பனையும் குறைவாக நடைபெற்றது. வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் வருகையும் குறைந்தே காணப்பட்டதால் மொத்த வியாபாரமும் மிகவும் குறைவாகவே நடைபெற்றது.

Tags : Erode ,Kani Market ,Panneerselvam Park ,Manikkundu Road ,TVS Road ,Easwaran Koil Road ,NMS Compound ,Kamaraj… ,
× RELATED நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத...