பாரிஸ்: பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் யோசனை ஐரோப்பா முழுவதும் வேகம் பெற்று வருகின்றது. இந்நிலையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்யும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 130 உறுப்பினர்களில் 121 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது வரும் வாரங்களில் செனட் சபையில் விவாதிக்கப்படும். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த சட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். இதன் மூலம் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் செப்டம்பர் முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
