×

வி.களத்தூர் கிராமத்தில் நாய், குரங்கு தொல்லை அதிகரிப்பு

*கட்டுப்படுத்த கிராம சபையில் மனு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கிளைத்தலைவர் பக்கீர் முகமது தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கிராம சபைக் கூட்டத்தில் பற்றாளராக கலந்து கொண்ட வேப்பந் தட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவர் பக்கீர் முகமது அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி. களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அளவுக்கு அதிகமான தெரு நாய்களும், கூட்டம் கூட்டமாக வந்து குரங்குகளும் பொது மக்களுக்கு, கடை வியாபாரிகளுக்கு தினம் தினம் அச்சுறுத்தலையே ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் பள்ளி மாணவ மாணவிகள், தெருக்களில் நடந்துசெல்லும் போது தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்து மிகுந்த பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து கடைக்காரர்கள் இருக்கும்போதே துணிகரமாக கடைகளில் புகுந்து விற்பனைக்காக வைத்திருக்கும் தின் பண்டங்களையும், கடைகள் முன்பு வைத்துள்ள பழங்களையும் பறித்துச் செல்வதோடு வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை அள்ளிச் செல்கிறது. அவற்றை விரட்ட முற்பட்டால் விரட்டும் நபரை தாவி கடிக்க வருகிறது.

ஏற்கனவே குரங்கு, நாய்கள் தொல்லை காரணமாக பலமுறை புகார் அளித்துள்ள நிலையில் தற்போது இந்தப் பிரச்சனை தீவிரமாகி வருகிறது.எனவே வி.களத்தூர், வண்ணாரம் பூண்டி, மில்லத் நகர், ஏரிக்கரை பகுதியில் வசித்துவரும் பொது மக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வரும் குரங்குகள், தெரு நாய்களைப் பிடித்து அப்புறப் படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : V. Kalathur ,Grama Sabha ,Perambalur ,STBI ,V. Kalathur panchayat ,Veppandhattai ,Fakir Mohammed.… ,
× RELATED திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்