மும்பை: மும்பையில் திருமண ஆசை காட்டி 10 ஆண்டுகளாக வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள பல்வேறு திரைப்பிரபலங்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கும் நடிகர் நதீம் கான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி, நதீம் கான் நெருங்கி பழகியுள்ளார்.
பின்னர் வெர்சோவாவில் உள்ள தனது வீட்டிலும், அப்பெண்ணின் வீட்டிலும் வைத்து கடந்த 10 ஆண்டுகளாக அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முதலில் வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் மல்வானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கியதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டு கடந்த 22ம் தேதி நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள நடிகர் நதீம் கான், சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ என்ற திரைப்படத்தில் அக்லக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர் அமிதாப்பச்சன், சஞ்சய் மிஸ்ரா மற்றும் அடில் ஹுசைன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் நீனா குப்தா மற்றும் சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ள ‘வத் 2’ என்ற படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
