புதுடெல்லி: நாடு முழுவதும் பல லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றிய மோசடி வழக்கில், அமலாக்கத்துறையினர் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக முடக்கியுள்ளனர்.பேர்ல் அக்ரோ கார்ப் லிமிடெட் (பிஏசிஎல்) என்ற நிறுவனம், பொதுமக்களிடம் நிலம் ஒதுக்கித் தருவதாகக் கூறி நாடு முழுவதும் சுமார் 6 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து பணம் வசூலித்தது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்பட்ட இந்நிறுவனம், சுமார் 60,000 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய நபரான நிர்மல் சிங் பங்கூ என்பவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி பிரேம் கவுர், மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் தற்போது தலைமறைவாக உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் சிபிஐ மற்றும் பஞ்சாப் போலீசார் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். கொல்கத்தாவில் உள்ள போலி நிறுவனங்கள் மூலமாகவும், ஹவாலா முறையிலும் துபாய் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளை வாங்கி பணத்தை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழுவிடம் சொத்து விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று லூதியானா மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள குற்றவாளிகளுக்குச் சொந்தமான 37 இடங்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே உள்ள 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய நிலம் உட்பட மொத்தம் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
‘கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் 7,600 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
