×

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்; டெல்லி செங்கோட்டை பாணியில் தாக்குதல் சதியா?: குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பரபரப்பு

நாகர்:ராஜஸ்தானில் பத்தாயிரம் கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆளில்லாத பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 187 பைகளில் நிரப்பப்பட்ட 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 9 பெட்டிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டிகள் ஃப்யூஸ் வயர்கள் இருந்தன. மேலும் குண்டு வெடிக்கச் செய்வதற்கான ‘குல்லாக்கள்’ மற்றும் இதர பொருட்களையும் மரப்பெட்டிகளில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுலைமான் கான் (58) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் ஹர்சோர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தானிவாலா மற்றும் அல்வார் ஆகிய பகுதிகளில் மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது பிடிபட்டுள்ள அபாயகரமான பொருட்கள் தொடர்பாக வெடிபொருள் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.பிடிபட்ட நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘சட்டவிரோத சுரங்கங்களுக்கு விற்பனை செய்யவே இந்த வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் டெல்லி குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வேதியியல் பொருட்கள் இங்கிருந்ததால், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என மாவட்ட சிறப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த 2025ம் ஆண்டு, நவம்பர் மாதம் 10ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். அந்த சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தற்போது ராஜஸ்தானில் அதே வகையைச் சார்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியை போன்று மீண்டும் ஒரு பெரும் தாக்குதலுக்கான ஏற்பாடா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Rajasthan ,Delhi ,Red Fort ,Republic Day ,Nagar ,Harshor village ,Nagar district of Rajasthan ,
× RELATED 77-வது குடியரசு தின விழா கோலாகலம்:...