மும்பை: உலக அளவில் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு 1,250 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2016ம் ஆண்டு ‘டைம்’ இதழின் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். அதேபோல ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிறகு, இந்த ஜோடி உலக அளவில் பிரபலமான ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இவர்களது மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,250 கோடி ரூபாயாகும். இதில் பிரியங்கா சோப்ராவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 583 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ‘சிட்டாடல்’ தொடருக்காக ஆண் நடிகருக்கு இணையாக 41 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற இவர், அனாமலி என்ற கூந்தல் பராமரிப்பு நிறுவனம், நியூயார்க்கில் சோனா என்ற உணவகம், டேட்டிங் செயலி மற்றும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.
மறுபுறம் நிக் ஜோனஸின் சொத்து மதிப்பு 666 கோடி ரூபாயாகும். இவர் ஜோனஸ் பிரதர்ஸ் இசைக்குழு, திரைப்படங்கள் மற்றும் ‘வில்லா ஒன்’ என்ற மதுபான நிறுவனம் மூலம் வருமானம் ஈட்டுகிறார். இருவரும் இணைந்து விளையாட்டு ஆடை நிறுவனம் மற்றும் உணவு நிறுவனங்களில் முதலீடு செய்து, தங்களது சொத்து மதிப்பை பன்மடங்கு பெருக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
