×

காற்றாடி பறக்க விட்டு கொடுங்காயம் ஏற்படுத்திய பெண் உள்பட 3 பேர் கைது: மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பெரம்பூர்: காற்றாடி பறக்க விட்டு கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜெயின் (67). இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த 22ம் தேதி மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் மாதவரம் பகுதியில் இருந்து மூலக்கடை மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஞ்சா நூல் அவரது முகத்தில் பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பிரகாஷ் ஜெயின் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மூலக்கடை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நஸ்ருதீன் (34), கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு (53), அதே பகுதியைச் சேர்ந்த அஸ்மா (38) என்ற பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரமேஷ் பாபு மற்றும் அவரது மகன்கள் ஆன்லைனில் பட்டம் வாங்கி விற்பனை செய்து வருவதும் அஸ்மா ஆந்திராவிலிருந்து பட்டம் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 20 காற்றாடிகள், மாஞ்சா நூல் ஆறு கட்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் ஜோசப், தியாகராஜன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விட்டால் கண்டிப்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் காற்றாடி பறக்க விடுவதை தவிர்க்கும் படியும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Perambur ,Prakash ,Korukkupettai ,Chennai… ,
× RELATED பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்...