அம்பத்தூர், ஜன.23: சென்னை சூளைமேடு, அண்ணா நெடும்பாதை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (56). இவரது மகன் கார்த்திக் (27), சினிமாவில் பிரபல நடனக்குழுவில் டான்சராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், மாதவரத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். அம்பத்தூர் டோல்கேட் அருகே வண்டலூர் – மாதவரம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அங்கு சாலையோரம் பழுதாகி நின்றிருந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் வேகமாக இவரது பைக் மோதியது. இதனால், தூக்கி வீசப்பட்ட நடன கலைஞர் கார்த்திக், படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை கார்த்திக் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான பொழிச்சலூரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் நிர்மல் (22) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், புறவழி சாலை மேம்பாலப் பகுதியில் சாலையோரம் பஞ்சராகி நின்றிருந்த சரக்கு வாகனம் நின்ற பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து நடைபெற்றதாக தெரியவந்தது.
