ஜகார்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை சென் யுபெய் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுபெய், தாய்லாந்து வீராங்கனை பிட்சமோன் ஒபாட்னிபுத் மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தனர். விறுவிறுப்பாக நடந்த அந்த செட்டை 23-21 என்ற புள்ளிக்கணக்கில் சென் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றார். அதனால் 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அனாஹத் தோல்வி
நியூயார்க்: ஸ்ப்ரோட் டோர்னமென்ட் ஆப் சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங், ஜப்பானை சேர்ந்த உலகின் 7ம் நிலை வீராங்கனை சடோமி வடனபே உடன் மோதினார். முதல் இரு செட்களை 11-6, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற அனாஹத், அடுத்த 3 செட்களை, 2-11, 8-11, 6-11 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தார். அதனால், தோல்வியை தழுவிய அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
டி20 உலக கோப்பை பாக். அணி அறிவிப்பு
லாகூர்: இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் அணி, தனது நிலையில் இருந்து பின்வாங்கியது. மேலும், சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பாக். அணி பட்டியலை பாக். கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
