- ஆஸி ஓபன் டென்னிஸ்
- சபலெங்கா
- கோகோ காஃப்
- மெல்போர்ன்
- அரினா சபலெங்கா
- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்
- மெல்போர்ன், ஆஸ்திரேலியா...
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), கனடாவை சேர்ந்த இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோ (19) உடன் மோதினார். முதல் செட்டில் அநாயாசமாக ஆடி அசத்திய சபலென்கா 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சபலென்காவுக்கு ஈடுகொடுத்து எம்போகோ ஆடியதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீடித்தது. இருப்பினும் அந்த செட்டை 7-6 (7-1) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய சபலென்கா, 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (21), செக் வீராங்கனை கரோலினா முசோவா (29) உடன் மோதினார். முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக இருவரும் கைப்பற்றிய நிலையில், 3வது செட்டில் சிறப்பாக ஆடிய காஃப் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய காஃப், காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
விறுவிறுப்பான திரில்லரில் தெறிக்கவிட்ட அல்காரஸ்
ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22), அமெரிக்காவின் தாமஸ் ஜான் பால் (29) உடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் அட்டகாசமாக ஆடி புள்ளிகளை வேட்டையாடினர். டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த அடுத்த இரு செட்களையும் 6-4, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அவரே கைப்பற்றினார். அதனால், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28), அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டோலோ (27) மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரெவ், 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
