×

குடும்ப பிரச்னைக்காக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்வது துரதிஷ்டவசமானது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசு ஒதுக்கீட்டு இடத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்துவிட்டு விதிகளின்படி அரசு மருத்துவமனையில் பணிபுரியாத மருத்துவர் மோனிகா என்பவரிடமிருந்து கட்டணமாக 40 லட்ச ரூபாய் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மறைமலைநகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, விதிகளின்படி அரசு மருத்துவமனையில் பணியாற்றாத மருத்துவர் மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த அரசு வழக்கறிஞர், இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவர் மோனிகா தரப்பில், மனுதாரர் தன்னுடைய மாமனார் என்ற தகவலை மறைத்து, இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும், தனக்கும் கணவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் அளித்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குடும்ப பிரச்னைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் தொடங்கி, குற்றவியல் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளை தொடர்வது துரதிஷ்டவசமானது. தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பும் அடையாத மனுதாரர், பழிவாங்கும் நோக்கில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. எனவே, மனுதாரருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்கிறேன். அந்த அபராத தொகையை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மனுதாரர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Balasubramaniam ,Maraimalainagar ,Monika ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி