×

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் – அறிவிப்பை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளதை கைவிட வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறதென்றும், மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் அச்சங்கள் இன்று உண்மையாகிவிட்டன என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறதென்று தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமது கடிதத்தில் முதலமைச்சர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது போல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், 12,000 எம்.பி.பி.எஸ் இடங்களுக்குப் போட்டியிட 1.40 இலட்சம் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையற்ற செலவு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளித் தேர்வுகளில் காட்டும் செயல்திறனைப் பயனற்றதாக்கிவிட்டதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சாடியுள்ளார். இந்தத் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ள அவர், தமிழ்நாட்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், இந்த இடங்களுக்குச் சேர விரும்பும் இலட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை விட மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும், இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு பெரும் அநீதியாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், உலகளவில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமோ அல்லது அதில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலமோ கல்வித்தகுதி வரையறுக்கப்படுகிறது என்றும், ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல என்றும், இது நீட் தேர்வை நாடு முழுவதும் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கானோர் நீட் பயிற்சியை நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் ஏழைக் குடும்பங்களின் செலவில் நீட் பயிற்சி மையங்கள் நன்றாக இலாபம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான தகுதியாக நீட் (NEET) மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தகுதி மதிப்பெண்கள் (cut-offs) படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு இணையாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால், இது மாணவர்களின் தரம் குறித்த வாதத்தை முற்றிலும் அர்த்தமற்றதாக்குகிறது என்பதைச் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும் என்பதும், இந்தச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்கி வைக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறும் தேசிய துணை மருத்துவ ஆணையத்திற்கு (NCAHP) அறிவுறுத்தவேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விஷயத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்தியப் பிரதமரின் விரைவான தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Chief Minister ,Modi ,Chennai ,Narendra Modi ,Tamil Nadu ,Shri Narendra Modi ,National Auxiliary Medicine and Health Works Commission ,NCAHP ,K. Stalin ,Akaditham ,
× RELATED எஸ்.ஐ.ஆரின் பெயரில் குஜராத்தில்...