×

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை: உடனடி நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை: வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் உடனடியாக செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஓட்டல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒன்றிய அரசும் வீட்டு சிலிண்டர் விலையை ரூ.60ம், வர்த்தக சிலிண்டர் விலையை ரூ.115ம் உயர்த்தி அதிரடியாக அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வர்த்தக சிலிண்டர் சப்ளை கடந்த இரண்டு நாட்களாக முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வீட்டு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கும் காஸ் சிலிண்டர் கிடைக்காமல் உள்ளது. அதே போன்று, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில், வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் தொழில் நிறுவனங்கள், உணவகங்களில் ஏற்பட்டுள்ள காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராதாகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, காஸ் சிலிண்டர் தங்கு தடையின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கூட்டம் முடிந்ததும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது: அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று (நேற்று) விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்த போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் எச்பி, இண்ேடன், பாரத் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. அப்போது காஸ் சிலிண்டருக்கு மாற்றாக மாற்று வழியை கையாளுவது மற்றும் காஸ் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு மற்றும் வணிக சிலிண்டர் விநியோகத்தில் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனங்களின் பங்கு தொடர்பான தகவல், ஒவ்வொரு நிறுவனமும் வீட்டு பயன்பாட்டிற்கு எவ்வளவு சிலிண்டர் விநியோகம் செய்கிறது, வணிக பயன்பாட்டிற்கு எவ்வளவு சிலிண்டர் விநியோகம் செய்கிறது என்பது தொடர்பான விவரங்களை கூட்டத்திற்கு கொண்டுவர எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tattupadu ,M.O. ,K. Stalin ,Modi ,Chennai ,Minister ,Chaharapani ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; அம்மா...