×

கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தம்: தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், டீ கடைகள் மூடல்

சென்னை: கடும் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் வர்த்தக சிலிண்டர் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இன்று ஓட்டல்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைக்காத பட்சத்தில் நாளை முதல் கடைகளை மூடும் நிலை ஏற்படும் என்று உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளன. ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து கடுமையாக ஏவுகணை தாக்குதல் நடந்து வருகிறது. ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவூதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்துள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடலில் எண்ணெய் கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலையேற்றம் அதிகரித்துள்ளது. இந்த அசாதாரண சூழலால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள இருப்பு கச்சா எண்ணெய்யை வைத்து பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பில்லாமல் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களும் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், சிலிண்டர் உற்பத்தியை மேற்கொள்வதற்காக திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு மிக குறைவாகவே உள்ளது. இந்த கச்சா எண்ணெய்யை இந்தியா, குவைத், கத்தார், சவூதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த வந்தநிலையில், அதன் சப்ளை தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவிடம் இருந்து அவசரத்திற்கு வாங்கியுள்ள கச்சா எண்ணெய் வந்தவுடன், சிலிண்டர் உற்பத்தியை பழைய நிலைக்கு கொண்டு வரும் முடிவில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்டுகளில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் சப்ளையை முழு வீச்சில் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றனர். இந்த வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளையில் எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என ஒன்றிய அரசு அறிவித்ததன் பேரில், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதேவேளையில் வீட்டு சமையல் சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு வராமல் இருக்க தற்காலிகமாக 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் உற்பத்தி, விநியோகத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள காஸ் பாட்டிலிங் பிளாண்டுகளில் வர்த்தக காஸ் சிலிண்டர் உற்பத்தி நேற்று மதியத்திற்கு பின் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த ஆலைகளில் இருந்து வர்த்தக சிலிண்டர் சப்ளை மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டை பொருத்தளவில், சென்னை எண்ணூர், செங்கல்பட்டு, சேலம் கருப்பூர், ஈரோடு பெருந்துறை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய 9 இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலிங் பிளாண்டுகள் உள்ளன. இதுபோக பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 5 பாட்டிலிங் பிளாண்டுகள் இருக்கின்றன. இந்த பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஓட்டல், பேக்கரி நிறுவனத்தார், சிலிண்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் சிறிய, பெரிய ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. இன்னும் 2 நாட்களுக்குள் இந்த வர்த்தக சிலிண்டர் சப்ளையை சீர்செய்யாவிட்டால், அனைத்து நகரங்களிலும் ஓட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூவில் வர்த்தக சிலிண்டர் சப்ளை இல்லாததால், ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவித்து, மூடிவிட்டனர்.

இதேநிலை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று முதல் ஓட்டல்களுக்கான வர்த்த சிலிண்டர் வினியோகம் என்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சிலிண்டர்களை வைத்து இன்று உணவு பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்கள் வழங்கி வருகின்றனர். தற்போதுள்ள சிலிண்டர் என்பது இன்றுடன் முடிந்து விடும். இன்றுக்குள் சிலிண்டர்கள் வந்தால் தான் நாளை ஓட்டல்களை திறக்க முடியும் இல்லாவிட்டால் ஓட்டல்களை மூடும் நிலைக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது முழுமையாக நடைபெறவில்லை. பெயரளவுக்கு தான் உணவு என்பது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது சமைக்க அதிக நேரமாகும் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் ஒன்றில் வரைட்டி ரைஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளதாக ஓட்டல் முன்பு அறிவிப்பு பலகையை வைத்து விட்டனர். தற்போது சென்னையில் உள்ள ஓட்டல்களில் குறுகிய நேரத்தில் தயாரிக்கும் வகையிலான உணவுகள் மட்டுமே தற்போது தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நீடித்துள்ளது.

இது குறித்து சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர் கூறியதாவது: பெரிய ஓட்டல்கள் என்றால் ஒரு நாளைக்கு வழக்கமாக 12 சிலிண்டர்கள் வரை செலவாகும். அதாவது, 33 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தேவைப்படும். இந்த சிலிண்டர்கள் காலியான உடனே கேஸ் ஏஜென்சிக்கு ஆட்டோமெட்டிக்காக மெசெஜ் போய் விடும். உடனே சிலிண்டர்களை அவர்கள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது சிலிண்டர் காலியாகி மெசேஜ் போனால் பதில் தருவது இல்லை. போன் போட்டு கேட்கலாம் என்றால் போனை ஆப் செய்து விட்டனர்.

இதனால், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறோம். இருக்கும் சிலிண்டர்களை வைத்து இன்று ஓரு நாள் கடைகளை நடத்தி விடலாம். இன்றுக்குள் சிலிண்டர் வராவிட்டால் நாளை முதல் ஓட்டல்களை இயக்குவது என்பது முடியாத காரியம். கொரோனா காலத்தில் எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டதோ? அதை நிலை தான் தற்போது வந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை இன்னொரு கொரானா 2.0 என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பாதிப்பு என்பது உள்ளது. நிலைமை சரியாகா விட்டால் ஓட்டல்களை நடத்த முடியாது. இந்த பிரச்னை தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

சிறிய டீக்கடைகளை நடத்துபவர்கள் கூறுகையில், ஒரு கடைக்கு இரண்டு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் சிலிண்டர்களை வைத்து கடைகளை நடத்தி வருகிறோம். இருக்கும் சிலிண்டர்கள் என்பது நாளை வரை தான் ஓடும். அதன் பிறகு சிலிண்டர் வந்தால் தான் கடைகளை நடத்த முடியும். இல்லாத பட்சத்தில் கடைகளை நடத்த முடியாது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். சமைக்க அதிக நேரமாகும் உணவு பொருட்கள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளோம்” என்றனர்.

சென்னையை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் ஓட்டல்கள் உணவை நம்பி தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நாளை முதல் சிலிண்டர்கள் இல்லாமல் ஓட்டல்கள் மூடப்பட்டால் அவர்களின் பாடு திண்டாட்டம் தான். அதே போல விடுதிகளில் தங்கி படிப்பவர்களுக்கும் உணவு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். இதன் பாதிப்பு நாளை தெரியவரும்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக...