×

உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அத்துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் அந்த பதவிகள் காலியாக உள்ளன. முன்னதாக தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் துணை வேந்தர்களை நியமிப்பதில் பல சர்ச்சைகளை உருவாக்கினார். குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து அவருக்கு நெருக்கமான நபர்களை துணை வேந்தர்களை நியமனம் செய்தார். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, சட்டப்பல்கலைக்கழகம், கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமனம் செய்தார். இதற்கு அப்போதைய திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருக்கும் வரை இந்த பிரச்சனை இருந்தன.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பொறுப்பேற்றவுடன் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசுநியமனம் செய்தது. அவர் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தின் கலாச்சாரம் – பண்பாடு, கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விமர்சனம் செய்வதும், கேலி செய்வதுமாக இருந்து வருகின்றார். மேலும் ஆட்சியை குறை கூறும் வகையில் பல்வேறு சர்ச்சையான பேச்சுகளை மேடைகளில் பேசி வருகிறார். இதற்கு அப்போதே தமிழக அரசும் , அமைச்சர்கள், அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். இதற்கிடையே உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி ஆளுநர் கூறும் கருத்துகளை நேரடியாக பதிலடி கொடுத்து வந்தார். மேலும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் அமைச்சர் பொன்முடி ஆளுநரின் பட்டமளிப்பு விழாக்களை தவிர்க்க தொடங்கினார்.

சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களைநியமனம் செய்வதில் தமிழக முதல்வருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தவர்கள் தங்களின் பதவி காலம் முடிந்து அந்த பதவிகளில் இருந்து விடுப்பட்டனர். அதற்கு பிறகு புதிய துணை வேந்தர்களை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை நீடித்து வருவதால் இன்னும் அப்பதவிகள் காலியாக உள்ளன. இந்தநிலையில் ஒரு சில பட்டமளிப்பு விழாக்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வந்தார். அதேபோல், ஆளுநரும் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதம் தமிழ் தாய் வாழ்த்துகு முன்னதாக இசைக்கப்படவில்லை என கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் அடாவடித்தனமும், அராஜக போக்கும் அதிகரித்த வண்ணமாக உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையேற்று 307 மாணவிகளுக்கும், 392 மாணவர்களுக்கும் என மொத்தம் 699 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

ஏற்கனவே, தமிழகத்தில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைகழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் 167வது பட்டமளிப்பு விழா ஜன.22ம் தேதி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, புறக்கணிப்பதாகவும் மாணவர்களுக்கு ஆளுநர் பட்டமளிக்க தகுதி அற்றவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் கால்நடை மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா. ராதாகிருஷ்ணன் புறக்கணித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Minister of Higher Education ,Kovi ,Minister ,Anita Radhakrishnan ,Sezhiyan ,Chennai ,Governor ,R. N. ,University of Veterinary Medical Sciences ,Ravi ,Tamil Nadu ,
× RELATED ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1,040...