×

மெட்ரோ நந்தனம் தலைமையகத்தில் மெட்ரோஸ் பூங்கா, பூப்பந்து மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா – பூப்பந்து மைதானம் ஆகியற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையை உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மாநகரமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வருகின்றார். தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் வகையில் கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துகிறார்.

மேலும், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்களை அமைத்து வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில் உள்ள மொத்தம் 3,750 சதுரமீட்டர் நிலப்பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டு மைதானத்தில் 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள் மற்றும் 2 பிக்கிள் பந்து திறந்துவெளி விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோஸ் பூங்காவை சுற்றி 370 மீ நீளம் கொண்ட நடைபகுதி மற்றும் 8 வடிவ நடைபகுதி, பிரத்யேக சிறுவர்கள் விளையாட்டு பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உள் அமர்வு மற்றும் வெளியரங்க அமர்வு பகுதிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பூங்காவை காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பூங்காவையும் மற்றும் விளையாட்டு அரங்குகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த பூங்கா, பூப்பந்து மற்றும் பிக்கிள் விளையாட்டு மைதானங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் வேலு, துணை மேயர் மகேஷ்குமார், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Metro Park ,Badminton Court ,Metro Nandanam Headquarters ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Metro Headquarters ,Nandanam ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED அதிமுக ஆட்சியில் 55 ஆயிரம் லேப்டாப்...