×

அதிமுக ஆட்சியில் 55 ஆயிரம் லேப்டாப் வீணடிப்பு: திமுக- அதிமுக இடையே காரசார விவாதம்

சென்னை: அதிமுக ஆட்சியில் 55 ஆயிரம் லேப்டாப் வீணடிக்கப்பட்டதாக எழுந்த பேச்சு தொடர்பாக திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது: 20 லட்சம் என்று கூறிவிட்டு 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியுள்ளீர்கள். அவர்கள் கல்லூரியை முடித்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில் அவர்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். படித்து முடித்த பிறகு அது எதற்கு?

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் வீட்டிற்கு ஏன் போகச் சொல்கிறீர்கள்? மடிக்கணினியை வைத்துக்கொண்டு வேலைக்கு போகட்டும்.

அமைச்சர் எ.வ.வேலு: அவர்கள் ஏக்கத்துடன் செல்லக்கூடாது, வாழ்நாள் முழுவதும் பயன்படட்டும் என்பதற்காக மடிக்கணினியை வழங்கியிருக்கிறோம்.

உதயகுமார்: 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தந்தார்கள். அந்தத் திட்டத்தைத் தொடர்வதிலே உங்களுக்கு என்ன கஷ்டம்?

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்: அதிமுக ஆட்சியில் 2017-18ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற 2.3 லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை மடிக்கணினி பெறவில்லை. அதற்கு அடுத்ததாக அந்த மடிக்கணினியை முழுமையாக வழங்காத காரணத்தினால் அந்த மடிக்கணினிகள் எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனவோ, அந்த இடத்திலேயே அவற்றிலுள்ள பேட்டரிகளெல்லாம் காலாவதியாகிவிட்டன. இவ்வாறு வாங்கிய மடிக்கணினிகளை, மாணவர்களுக்கு வழங்காததால் 55 ஆயிரம் மடிக்கணினிகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி சிஏஜி அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு: அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களாக இருக்கும்போது திட்டத்தை அறிவித்தோம். கல்லூரியை முடித்துச் செல்லும்போது அவர்களுக்கு அது இல்லை என்று சொன்னால், அந்த அறிவிப்பு அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், அந்த திட்டம், முதல் ஆண்டு மாணவர்களிடம் இருந்து செயல்படுத்தப்படும். இறுதியாண்டு மாணவர்கள் இனி படிக்கமாட்டார்கள் என்று யார் நிர்ணயிப்பது? மேற்படிப்பிற்கு செல்வது தொடர் நிகழ்வு. எல்லா வகையிலும் அவர்களுக்கு பயன்படக்கூடியது மடிக்கணினி. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : AIADMK ,DMK ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Deputy Leader ,
× RELATED கிழக்கு திசை காற்று அலை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு