- AMMK
- பிரதி பொது செயலாளர்
- திமுக
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- அஇஅதிமுக
- TTV
- சென்னை
- எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா
- டி.டிவி தீனகரன்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
சென்னை: அமமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அவர் டிடிவி.தினகரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் அதிமுக- பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்தது.
இதனை அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி.தினகரனும் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக்கொண்டனர். தற்போது அது எங்களுக்குள் இருக்கும் பங்காளி சண்டை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இந்த கூட்டணியினால் அமமுகவில் அதிருப்தி காணப்படுகிறது. அமமுக துணை பொதுச்செயலாளரான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்க ராஜா வெளிப்படையாகவே அதிமுக-பாஜவுடன் கூட்டணி அமைத்ததை எதிர்த்தார்.
இந்நிலையில் தான் கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் விதமாக செயல்பட்டதாக மாணிக்க ராஜாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து டிடிவி.தினகரன் அதிரடியாக நீக்கம் செய்தார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், \”அமமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணானவகையில் செயல்பட்டதாலும்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.எஸ்.பி. மாணிக்கராஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்\” என்று தெரிவித்து இருந்தார்.
அமமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணிக்கராஜா தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக தென்காசி மாவட்ட செயலாளர் ஆர்.ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத், கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் வி.ரத்தினராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்டெல்லஸ் மற்றும் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
அப்போது திமுக பொருளார் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏ செந்தில்பாலாஜி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
* ‘‘கட்சி ஆரம்பித்த நோக்கமே போச்சே..’’
திமுகவில் இணைந்த பின்னர் மாணிக்கராஜா அளித்த பேட்டி:பாஜ கூட்டணியில் இருந்து வெளியே வந்த 4 மாதங்களில் மீண்டும் அந்த கூட்டணியில் இணைவது குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை. எந்த நோக்கத்திற்காக அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதைந்து போன பிறகு அதில் தொடர்வதில் விருப்பமில்லை. 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு சென்றது அமமுகவினர் அனைவருக்குமே அதிருப்தி.
டிடிவி.தினகரனிடம் நண்பர் என்ற முறையில் பலமுறை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என கூறியிருந்தேன். எடப்பாடிக்கு அவர் பங்காளியாகவே இருந்துவிட்டு போகட்டும். எங்களுக்கு பிடிக்கவில்லை; அந்த கூட்டணியை விரும்பவில்லை. தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து பயணிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
