×

துரோகியா பங்காளியா?

நெல்லை: டிடிவி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு 2024ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இருந்தாலும் தென் மாவட்டத்தில் டிடிவி.தினகரனுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு மாதத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாஜ மேலிட பார்வையாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

எடப்பாடியை துரோகி என்றும், அதிமுக இடம் பெறும் கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறி விட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் ஐக்கியமானது அவரது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டிடிவி தினகரன், அதிமுகவில் இருப்பது பங்காளி சண்டை எனக் கூறி சமாளித்தார். ஆனால் அவரது காரணத்தை அமமுகவினர் ஏற்கத் தயாராக இல்லை.

இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கணிசமாக உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கட்சி மாறவும் திட்டமிட்டுள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால், டிடிவி தினகரனுடன் மிகவும் நெருக்கமாக இருந்த அமமுக துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். இதேபோல், தென் மற்றும் டெல்டா மாவட்ட அமமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, அமமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அமமுக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகளும், சங்கரன்கோவிலில் 28 ஆயிரம் வாக்குகளும், வாசுதேவநல்லூரில் 10 ஆயிரம் வாக்குகளும் அமமுகவிற்கு கிடைத்தன. இவை எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாக்குகள்.

தற்போது, அவருடன் கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே இந்த கூட்டணிக்கு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகள் கடந்த தேர்தலைப் போல் கிடைக்காது. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் அழுத்தம் தாங்காமல் எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் அமமுக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

* தாமரை சின்னத்தில் போட்டி?
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், எடப்பாடியிடம் பேரம் பேசி பாஜக பெறும் தொகுதிகள் தான் அமமுகவிற்கு ஒதுக்கப்படும். இதனால் பாஜ வாக்கு வங்கியை காட்ட தாமரை சின்னத்தில் அமமுகவை போட்டியிட வைக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குக்கரை தூக்கி சுத்திய டிடிவி இந்த முறை தாமரையை தூக்கி சுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

Tags : Rice ,DTV ,Dinakaran ,Ammuka ,Kovilpatty ,2024 ,Lok elections ,National Democratic Alliance ,NDA ,Theni ,Dhanga ,Tamil Selvan ,
× RELATED கிழக்கு திசை காற்று அலை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு