தஞ்சாவூர்: தஞ்சாவூர் அதிமுக மாநகர செயலாளராக இருந்து வருபவர் சரவணன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய பிறகு, தஞ்சாவூரில் சரவணனின் கை பலமானது. தஞ்சாவூரில் நம்பிக்கைகுரியவராக எடப்பாடிக்கு சரவணன் இருந்து வருகிறாராம். இது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான அறிவுடைநம்பி, காந்தி, துரைதிருஞானம் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. சரவணன் குறித்து, மூத்த நிர்வாகிகள் தலைமைக்கு பல்வேறு புகார்களை அனுப்பினார்களாம்.
ஆனால், புகார் மீது கட்சி தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, சரவணனுக்கு கட்சியில் முக்கியத்துவம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் சரவணனுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளனர். சரவணனிடம் நெருக்கம் காட்டினால், நமக்கு தான் சீட் கிடைக்கும் என அவர்கள் எண்ணினார்களாம். தற்போது, சரவணனுக்கு சீட் கொடுக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீனியர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘கடந்த காலங்களில் அதிமுக சார்பில் மூத்த நிர்வாகிகளான காந்தி மற்றும் அறிவுடை நம்பி ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். வரும் தேர்தலில், எங்களுக்கு தான் சீட் வேண்டும் என மூத்த நிர்வாகிகள் துரைதிருஞானம், காந்தி, அறிவுடை நம்பி ஆகியோர் தனித்தனியாக தலைமையிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், தலைமை அவர்களுக்கு எவ்வித சிக்னலும் கொடுக்கவில்லை. முக்கியமாக, தஞ்சாவூர் அதிமுகவில் என்ன நடக்கிறது, நிர்வாகிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் தலைமைக்கு சரவணன் ஆதாரத்துடன் அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தலைமை அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. மூத்த நிர்வாகிகள் சரவணனை கட்சியில் ‘டம்மியாக்கி விடலாம்’ என நினைதார்கள். அதுவும் எடுபடவில்லை. ஒருவேளை மூத்த நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்காமல், சரவணனுக்கு சீட் கிடைத்தால், வழக்கம் போல் உள்ளடி வேலைகளுக்கு பஞ்சம் இருக்காது,’‘என்றார்.
