விழுப்புரம்: தமிழகத்தில் பாஜ எப்படியாவது காலூன்ற பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வீக்கானதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜ தற்போது பல துண்டுகளாக உடைத்து பெரும் பகுதியை கைப்பற்றி விட்டதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை விரும்பாத பாஜ ஒவ்வொரு மண்டலங்கள், மாவட்டங்களில் அதிமுக தலைவர்களை சந்தித்து அவர்களை தன் கட்டுப்பாட்டில் மறைமுகமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவர்களை பயன்படுத்தி இபிஎஸ்சுக்கு எதிராக பாஜவின் பி-டீமாக பயன்படுத்தி முழு பலம்பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்துதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தேர்வில் அவரே நேரடியாகவும், தனது மகன் மூலமாகவும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தன்னுடைய ஆதரவாளர்களை வேட்பாளராக தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறாராம்.
ஆனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தாங்கள் பரிசீலிக்கும் வேட்பாளர்களை களமிறக்க வேண்டுமென்று இபிஎஸ்சுக்கு நிர்பந்தம் செய்து வருகிறார்களாம். அப்படித்தான் வடமாவட்ட அதிமுகவில் வன்னியர் சமுதாய தலைவராக காட்டிக் கொள்ளும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறாராம்.
ஏற்கனவே இந்த பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, சி.வி.சண்முகம் ராஜ்யசபா எம்பி ஆனது முதல் டெல்லி மேலிட நெருக்கம் அதிகரித்தது. இதனை பயன்படுத்தி வட மாவட்ட வேட்பாளர்கள் தேர்வில் சி.வி.சண்முகத்தின் பின்னணியில் பாஜ களமிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலும் இவரின் ஆதரவாளர்களே அதிகளவு நியமிக்கப்பட்டு பதவி வகித்து வருகின்றனர். அதேபோல் தற்போது வேட்பாளர்கள் தேர்வு பட்டியலிலும் இவரின் ஆதரவாளர்களே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் பாஜவின் பி-டீமாக வேலுமணி, தங்கமணி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த வரிசையில் வடமாவட்டங்களில் சி.வி.சண்முகமும் பாஜ பி- டீமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வடமாவட்ட அதிமுகவினர் கூறுகையில், ‘வட மாவட்ட அதிமுகவில் சமுதாய அடிப்படையில் சி.வி.சண்முகம் செல்வாக்குமிக்கவராக இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு தனது செல்வாக்கை பயன்படுத்தி எம்பியாகி உள்ளார். எம்பி பதவிக்கு வந்தது முதல் தமிழகத்தைவிட டெல்லியில்தான் அதிக முகாமிட்டிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜதான் காரணம் என்று முதலில் குற்றம் சாட்டிய அவரே தற்போது பாஜவின் துதிபாடி அக்கட்சியை தூக்கிப் பிடித்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் பாஜ நினைத்ததை நிறைவேற்ற அதிமுகவில் இபிஎஸ் பல வகையில் முட்டுகட்டை போட்டு வருவதால் அக்கட்சியில் உள்ள தனது பி-டீம் தலைவர்கள் மூலம் பாஜ நினைப்பதை நிறைவேற்றி வருவதாகவும், அந்த வரிசையில் வேட்பாளர்கள் தேர்வு பட்டியலும் இருக்கும் என்கின்றனர்.
ஏனென்றால் சட்டமன்ற தேர்தலுக்குபிறகு அதிமுகவில் எதுவும் நடக்கலாம் என்பதால் தற்போதே பி- டீம் தலைவர்கள் மூலம் அதிமுகவை பாஜ தன்வசப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். பாஜவின் இந்த அதிரடி வியூகங்களுக்கு மத்தியில் இபிஎஸ் என்னதான் முயற்சித்தாலும் அவருக்கு தேர்தலுக்குப்பின் கல்தா கொடுப்பது உறுதி’ என்றனர்.
* ஓகோன்னு இருந்த கே.பி.முனுசாமி எங்கே?
அதிமுகவில் வடமாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தில் மூத்த அமைச்சராகவும், நிர்வாகியாகவும் வலம் வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி. ெஜயலலிதா இருக்கும்போது ஐவர் குழுவிலும் முக்கிய நபராக இருந்தார். ஆனால் தற்போது வட மாவட்டங்களில் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு சி.வி.சண்முகம் எம்பிதான் டானாக இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி போடும் எல்லா குழுவிலும் சி.வி.சண்முகம் பெயர் நிச்சயம் இருக்கும். அந்தளவிற்கு சீனியரை ஓவர்டேக் செய்து வட மாவட்டங்களில் ஜொலித்து வருகிறார். எடப்பாடியும் இந்த பகுதியில் சி.வி.சண்முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கே.பி.முனுசாமி எங்கே இருக்கிறார் என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியினரே நகைக்கின்றனர். அதேசமயம் ஜெயலலிதாவிடம் முக்கிய நபராக வலம் வந்த அவரை தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
