×

பணம் கொட்டும் தொகுதி அண்ணாமலை டார்கெட்

கோவை: கோவை மாநகர பகுதியில் அமைந்துள்ள தொகுதிகளில் ஒன்று சிங்காநல்லூர். மாநகராட்சியின் 18 வார்டுகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.ஜெயராம் வெற்றி பெற்றார். வருகின்ற தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வியை தழுவிய அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வரும் அண்ணாமலை, தனது பவரை காட்ட வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் தொகுதி தேர்வில் அண்ணாமலை கூடுதல் கவனம் செலுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு, அதிகளவிலான வாக்குகள் சிங்காநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து கிடைத்தது தெரியவந்தது.

மேலும் தொழில் முனைவோர்கள் அதிகமுள்ள பணப்புழக்கம் உள்ள தொகுதி என்பதால் அதிக தேர்தல் நிதி திரட்ட வாய்ப்பு என பல கணக்குகளை போட்டு பார்த்து, அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியிலேயே கவனம் செலுத்திய எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதியை எட்டிக் கூட பார்க்கவே இல்லை.

இதனால் அதிமுக படுதோல்வி அடைந்ததோடு, மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் எஸ்.பி.வேலுமணியின் முழு ஆதரவும் இருப்பதால், அண்ணாமலை துணிந்து சிங்காநல்லூர் தொகுதியில் களமிறங்குவதாக கூறப்படுகின்றது. அதேசமயம் பாஜவிற்கு வலுவான கட்டமைப்பு இல்லாததால், அனைத்து பூத்களிலும் ஏஜென்டுகளை போட அதிமுக ஆதரவையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதே தொகுதியை சேர்ந்தவர்களான கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய சிங்கை ராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கே.ஆர். ஜெயராம் ஆகியோர் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர்.

கட்சிக்காக உழைத்த இவர்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, அதிமுக தலைவர்களை இழிவாக பேசிய அண்ணாமலையை எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்திருப்பது, ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படைய செய்துள்ளது. தேர்தல் செலவிற்கு நண்பர்கள் பணம், வாக்கிற்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு மற்றும் அதிமுக வாக்கு வங்கி என முழுக்க முழுக்க நண்பர்கள் ஆதரவை நம்பி அண்ணாமலை களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Annamalai ,Coimbatore ,Singanallur ,K.R. Jayaram ,AIADMK ,BJP ,
× RELATED கிழக்கு திசை காற்று அலை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு