×

திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பேருந்து நிலைய இறுதி கட்ட பணிகள் விறுவிறு

திருத்தணி,ஜன.24:சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் மற்றும் திருத்தணி சுற்று வட்டாரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாடம் திருத்தணிக்கு வந்து ரயில், பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பயணிகளுக்கு போக்குவரத்து வசதி மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் 4.60 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டது.

முருகன் கோயில் வடிவில் முகப்பு : முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயில் கோபுரம் வடிவில் பேருந்து நிலையம் முகப்பு பகுதி அமைக்கும் வகையில் ரூ.2.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் முருகன் கோயில் தோற்றத்தில் முகப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலைய பணிகள் பெரும் அளவில் முடிந்த நிலையில் கான்கிரீட் தரை தளம் அமைக்க நிதி பற்றாகுறையால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ரூ.5.30 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிலையில் கடந்த சில நாட்களாக கான்கிரீட் தரை தளம் அமைக்கும் பணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களில் பணிகள் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் மேற்பார்வையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக ரூ.20.97 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாதம் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், திருத்தணிக்கு பெருமை சேர்க்கும் வகையில், போக்குவரத்து நெரிசல் குறைந்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவை கிடைக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruttani ,Anna Bus Stand ,
× RELATED கூடப்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்