திருத்தணி, ஜன.24:சமூக விரோத செயல்கள் என்றால், கடந்த காலங்களில் ரவுடிகள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கடும் குற்ற செயல்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் குற்றம் என்றாலும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்திருத்த பள்ளி அனுப்புவதால், அச்சமின்றி கொடும் குற்ற செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது ஒட்டுமொத்தமாக இளம் தலைமுறை மீது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிறார் நீதி சட்டம் 2015 என்ன சொல்கிறது. சிறார் நீதி சட்டம் 2015ல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் 2021ல் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டத்துடன் முரண்படும் 18 வயது உட்பட்ட சிறுவர்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. கடுமையான குற்றங்கள் மற்றும் சிறிய குற்றங்கள் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கு அதிகபட்சமாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பவதோடு போலீசார் பணி முடிந்து விடுகிறது.
அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள்: தகவல் தொழில்நுட்ப புரட்சி அதிகரித்த நிலையில், சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை சிறுவர்கள் செலவிடுவதால், அவர்களில் இயற்கையாகவே குற்ற செயல்களில் ஈடுபடு ஏற்படுகிறது. எளிதில் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்ற உணர்வில் குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கி படிப்படியாக குற்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ஆந்திர எல்லை மாவட்டமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் தடையின்றி போதை பொருட்கள் எளிதில் கிடைத்து விடுவதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால், குற்ற செயல்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றம் மோகத்தில் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில நபரை பட்டா கத்தியால் கொடூரமாக தாக்கிய சிறார்களுக்கு தண்டனை வழங்காமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புவது.
வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் பாதுகாப்பு, பராமரிப்பு பெயரில் விடுவிக்கப்படுவதால், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய காவல் துறை கடும் நெருக்கடி சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: சிறார் நீதி சட்டம் திருத்தம் (2020) செய்யப்பட்ட சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. குற்ற செயல்கள் கட்டுப்படுத்தவும், இளம் சமுதாயம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறார் என்ற நிலைப்பாட்டை மாற்றி 15 வயது வரை மட்டுமே சிறார் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும், குற்ற செயல்கள் பொறுத்து தண்டனை தீவிர படுத்தினால் மட்டுமே சிறார் குற்றங்கள் குறையும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
