ராமேஸ்வரத்தில் தைப்பூச திருவிழா ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வீதியுலா திரளான பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம், ஜன.29: ராமேஸ்வரம் கோயில் தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளிர். பத்து மாதங்களுக்குப்பின் ராமேஸ்வரம் நகர் வீதிகளில் சுவாமி உலா நடைபெற்றதால் வழிநெடுக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடுதலும், கோயிலுக்கு வெளியே வீதிகளில் சுவாமி உலா வருவதற்கும் இருந்த தடை நீடித்து வந்தது.

இந்நிலையில் ராமேஸ் வரம் கோயிலிலும் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தைப்பூசம் நாளில் தெப்ப உற்சவம் நடத்திடவும், தெப்பத்தில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வலம் வருவதற்காக சுவாமி புறப்பாடு ஏற்பாடுகளை செய்யவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நேற்று தைப்பபூசம் என்பதால் லெட்சுமணேசுவரர் தீர்த்தக்குளத்தில் சுவாமி அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூன்று மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

பின்னர் சுவாமி, அம்பாள் சன்னதியில் வழக்கமான கால பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து 10.30 மணிக்கு மேல் லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் புறப்பாடாகி வீதியுலா வந்து லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு லட்சுமண தீர்த்தக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது.

பத்து மாதங்களுக்குப்பின் கோயிலுக்கு வெளியில் ரதவீதி மற்றும் நகர வீதிகளில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றதால் உற்சாகமடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் முன்பு தேங்காய் பழம் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நேற்று பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. தெப்ப உற்சவம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோயிலை வந்தடைந்ததும் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

Related Stories: