திருவாரூர், ஜன. 23: திருவாரூரில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான நில அளவை பயிற்சியினை கலெக்டர் மோகனசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி -4ன் கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவை பதிவேடுகள் துறையின் சார்பில் நேற்று முன்தினம் (21ந் தேதி) முதல் 60 நாட்கள் நில அளவை பயிற்சி துவங்கியுள்ளது.
அதன்படி, திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சியினை கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டார். முன்னதாக, கல்லூரியிலுள்ள சிறு தானிய உணவகத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு தரமானதாகவும், சுகாதாரமான முறையிலும் உணவுகள் வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
