நாமக்கல், ஜன.22: நாமக்கல்லில் உள்ள தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள், மோகனூர் அருகே உள்ள மேலப்பேட்டைபாளையத்தில் அமைந்துள்ள தன்னார்வ அமைப்பை நேரில் சென்று பார்வையிட்டனர். அமைப்பின் இயக்குநர் சதீஷ்பாபு மற்றும் திட்ட மேலாளர் பிரபாகரன் ஆகியோர் மாணவிகளுக்கு நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கினர். நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு திட்டங்கள் என்பது மண், நீர் மற்றும் தாவர வளங்களை பாதுகாப்பதுடன், மழை சார்ந்த பாழடைந்த நிலப்பகுதிகளில் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த, சமூக மையமான திட்டங்களாகும். ஒரு முழு பகுதியை ஒரே அலகாகக் கொண்டு அறிவியல் முறைகளும் மக்களின் பங்கேற்பும் மூலம் செயல்படுத்தப்படும். இத்திட்டங்களின் முக்கிய இலக்குகள் மண் அரிப்பை குறைத்தல், நீர் கிடைப்பை அதிகரித்தல், வேளாண் உற்பத்தித்திறனை உயர்த்துதல், சூழலியல் சமநிலையை மீட்டெடுத்தல் மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையாகும். இந்த சுற்றுப்பயணம் கல்வியியல் அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் அளித்ததுடன், நீர்ப்பிடிப்பு மேலாணமை தொடர்பான புரிதலை மேலும் ஆழப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவியர் தெரிவித்தனர்.
