நாக்பூர்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று துவங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி இன்று, நாக்பூரில் இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது. இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு, கடந்த 2024ல் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 72 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றிகள் கிடைத்துள்ளன.
இருப்பினும் சமீப காலமாக சூர்யகுமாரின் பேட்டில் இருந்து ரன்கள் வருவது வெகுவாக குறைந்து வருவது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது. மாறாக, சமீபத்தில் முடிந்த, இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை, நியூசிலாந்து முதல் முறையாக கைப்பற்றி உள்ளது. டி20 போட்டிகளை பொறுத்தவரை, சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி, தான் எதிர்கொண்ட 25 போட்டிகளில் 18ல் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024ல் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின், நியூசிலாந்து அணி எதிர்கொண்ட 21 போட்டிகளில் 13ல் வெற்றி பெற்றுள்ளது.
டெவான் கான்வே, கேப்டன் மிட்செல் சான்ட்னர், ஜேகப் டஃபி, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய நியூசிலாந்து அணி, எந்த அணியையும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக உள்ளது. இந்திய அணியில் 3வது வீரராக களமிறங்கும் இஷான் கிஷண் அற்புதமான ஃபார்மில் உள்ளது அணிக்கு பலம். சூர்யகுமார், 4வது வீரராக ஆடுவார் எனத் தெரிகிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகிப்பர். எனவே, இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவால் மிக்கதாகவே இருக்கும்.
