×

குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர், ஜன.21: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு – செலவு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், நலிவுநிலை குறைப்பு நிதி தொடர்பான திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதித்தல், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் பணிகள் தொடர்பாக விவாதித்தல், தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு, நடைபெறும் கிராம சபைக்கூட்டங்களில் அவ்வூராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபைக்கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, மேற்படி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Gram ,Sabha ,Republic Day ,Thiruvallur ,Tiruvallur District ,Collector ,Pratap ,Gram Sabha ,Tiruvallur ,Republic Day.… ,
× RELATED அரசுக்கு சொந்தமான 6.2 கிரவுண்டு நிலம் மீட்பு