திருத்தணி, ஜன.21: முருகப்பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை மற்றும் தை மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால், நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கடும் பணி மற்றும் குளிர் பொருட்படுத்தாமல் கோயிலில் குவிந்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை, சண்முகர் உற்சவர் மற்றும் ஆபத்சகாய விநாயகர் ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்படிகள் மற்றும் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு வந்தடைந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
