நாகர்கோவில்: விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011ல் திடீரென்று தொகுதிக்குள் அறிமுகம் ஆகி முதல்முறையாக விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் காங்கிரஸ் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார். 2021ல் மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாக அதே தொகுதியில் 71,764 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த விஜயதரணி, 2024 பிப்ரவரி 24 அன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தன்னை பாஜவில் இணைத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.தற்போது விஜயதரணி பாஜவில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அவருக்கு விளவங்ேகாடு தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அண்மையில் நடந்த பொங்கல் விழாக்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். 2024 மக்களவைத் தேர்தலின் போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில்போட்டியிட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற விளவங்கோடு இடைத்தேர்தலிலும் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு தரவில்லை.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் விளவங்கோடு தொகுதியிலோ அல்லது நாகர்கோவிலிலோ பாஜக சார்பில் மீண்டும் களம் காணத் தயாராகி வருகிறார். இதை முன்னிறுத்தியும் அவர் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். இருப்பினும் நாகர்கோவிலில் போட்டியிட கட்சிக்குள் வேட்பாளர்கள் வரிசை கட்டி நிற்பதால் நாகர்கோவிலைவிட சீட் பெறுவதில் விளவங்கோடுதான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கருதுகிறார். விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை மீண்டும் போட்டியிட வைக்க பாஜக மேலிடமும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியின் வெற்றி பெறுவாரா? என்று மக்கள் கையில்தான் உள்ளது.
காங்கிரசில் செல்வாக்காக இருந்த விஜயதரணி முக்கிய பதவிக்கு ஆசைப்பட்டு, பாஜவில் சேர்ந்தார். ஆனால், பாஜவில் அவருக்கு இதுவரை எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. பாஜகவில் ஒரு முக்கியப் பெண் ஆளுமையாக அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அரசை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக காங்கிரசில் இருந்திருந்தால் மீண்டும் எம்எல்ஏ சீட் வாங்கி இருக்கலாம். ஆனால், இருந்த எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, பாஜவில் ஒப்புக்கு சப்பாக விஜயதரணி இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
