- எம்.ஜி.ஆர்
- டிரம்ப்
- சுயவிவரம்
- சண்முகம்
- விஜய்
- விழுப்புரம்
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- சி.வி ஷண்முகம்
- விக்கிரவாண்டி
விழுப்புரம்: ‘உலகத்தில் ஒரே எம்ஜிஆர்தான். டிரம்பால்கூட காரு, பங்களாவை கொடுக்க முடியாது’ என்று விஜய்யை ஒருமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசி உள்ளார். விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நேற்றுமுன்தினம் இரவு அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது: பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை பாருங்கள்.
நாங்களும் சொல்லுவோம், திமுகவும் சொல்லுவாங்க, புதுசு, புதுசா வந்திருக்கிறவங்களும் சொல்லுவாங்க. ஒருத்தன் சொல்றான் (விஜய்) காரு, பங்களா என்று. காரு, பங்களா அமெரிக்கா காரனாலகூட, டொனால்ட் டிரம்பால்கூட கொடுக்க முடியாது. இதுமாதிரி நிறைய சொல்லுவாங்க. நீங்க முதலில் ஆய்வு பண்ண வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, செயல்படுத்த முடியுமா, இவங்களால் முடியுமா, யாரால் செயல்படுத்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
இன்று வரவங்க எல்லோரும் சொல்லிக்கலாம் சிவப்பு எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர், பெரிய எம்ஜிஆர் என்று சொல்லிக்கலாம். ஆனால் உலகத்தில் ஒரே எம்ஜிஆர். அது நம்முடைய எம்ஜிஆர் மட்டும்தான். தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டு காலம் அவர் மறைவுக்குப்பின்னும் ஒரு தலைவர் மக்கள் மனதில் நீடிக்கிறார் என்றால் எம்ஜிஆர் மட்டும்தான். சில பேர் சொல்லிக்கலாம். இன்று வரவங்கெல்லாம் சொல்லிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
‘ஓசியில 6 காஸ்’ மீண்டும் சர்ச்சை: ‘கடந்த தேர்தலில் நாங்க என்ன சொன்னோம். சிலிண்டர் காஸ் தர்றோம் என்று. ஒரு காஸ் சிலிண்டர் ரூ.1,500க்கு விற்கிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருகிறார்கள். 6 காஸ் வாங்கினா ரூ.600 ஆச்சு. ஆனால் எடப்பாடி என்ன சொன்னார். 6 காஸ் ஓசியில் கொடுக்கிறோம் என்று சொன்னார்’ என்று சி.வி.சண்முகம் பேசினார். ஓசி என்று வார்த்தையை விட்டதும் சுதாரித்த சி.வி.சண்முகம் சிறிது மவுனத்திற்குபின், ஓசி என்று சொன்னால் அது வம்பா போய்விடும் என்று தனது பேச்சை திருத்திக் கொண்டு மானியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், ‘‘இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு என அறிவிப்பது போல், ‘‘தேர்தல் நேரத்தில் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க’’ என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
