×

கடற்கரையை பிடிக்க போவது யார்? ஓபிஎஸ் விசுவாசியா மாஜி அமைச்சரா: எந்த பக்கம் சாய்வார் எடப்பாடி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவில் பனிப்போருக்கு பஞ்சமில்லை. தலைமையிடம் தங்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என இலை கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் 2 பேரும் போட்டி போட்டு கொண்டு தங்களின் ‘பவர்களை’ காண்பிக்க முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால், உண்மை நிலவரம் தலைகீழாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட அதிமுகவில் தன்னை விட யாரும் கட்சியில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கறராக உள்ளார். நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுகவில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பது கூட தன்னிடம் கலந்து ஆலோசித்து தான் தலைமை சீட் கொடுக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அந்த அளவுக்கு மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு உள்ளார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் அணிக்கு சென்று விட்டு, பின்னர் அதிமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால், தற்போது அதிமுக தலைமையிடம் நெருக்கம் காட்டி வருகிறார். இதையறிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சர் ஜெயபாலுக்கு ‘செக்’ வைப்பதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து தலைமைக்கு உட்கட்சி மோதல் சம்பந்தமாக புகார் பறந்த வண்ணம் உள்ளதாம். இதனால் நாகப்பட்டினம் என்ற பேச்சை கேட்டாலே தலைமை திணறி வருகிறதாம்.

இதுகுறித்து நாகப்பட்டினம் அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர்கள் தங்க கதிரவன், நகர்மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயபாலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர்கள் புதிய முகத்திற்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவற விட்ட தங்க கதிரவன் நாகப்பட்டினம் அதிமுகவில் சீனியர். எனவே அவருக்கு தான் கொடுக்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் தரப்பினர் கூறி வருகிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால் ஆகியோர் நாகப்பட்டினம் தொகுதிக்கு சீட் வாங்குவதில் மல்லுக்கட்டி வருகிறார்கள். இவ்விஷயத்தில் தலைமை என்ன ெசய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது. இருந்தாலும், ஓ.எஸ்.மணியன் விரும்பும் நபருக்கு தான் சீட் கிடைக்கும் என தெரிகிறது. ஒருவேளை ஓ.எஸ்.மணியன் தரப்பினருக்கு ‘சீட் கிடைத்து விட்டால், ஜெயபால் தரப்பினர் சும்மா விட மாட்டார்களாம். இதுதொடர்பாக அதிமுகவின் சீனியர் தலைவர்களிடம் ஜெயபால் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்’’ என்றனர்.

Tags : OPS ,Edappadi ,Nagapattinam ,AIADMK ,Leaf Party ,
× RELATED சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க...