×

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் புதிய டைடல் பூங்காக்கள்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் வர உள்ளன என்று ஆளுநர் தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றியபோது கூறியதாவது: தொழில் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இதுவரையில் 1176 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 லட்சம். 2025ம் ஆண்டில் மட்டும் 14.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மின்னணுவியல் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.2 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் கடந்த 2000ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட டைடல் பூங்கா, தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கான உயரிய இடத்தை உறுதி செய்தது.

அதே வழியில் இந்த அரசும் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ஒரு டைடல் பூங்காவையும், தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும் நிறுவியுள்ளது. மேலும் மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், உதக மண்டலம், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த தொழில் பரவி நம் மாநிலம் சமச்சீரான வளர்ச்சியை எட்டும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சென்னையில் ரூ.83 கோடி மதிப்பில் நிதி நுட்ப மையம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 18 புதிய துறைசார் கொள்கைகளை இந்த அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை மாநிலத்தின் மொத்த தொழில் சாலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி முறை என்னும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் குறு, சிறு நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது. உ லக புத்தொழில் மாநாடு, தொழில் பயிற் முகாம்கள் என பல முன்னெடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

Tags : New Tidal Parks ,Tamil Nadu ,Chennai ,Governor ,Legislative Assembly ,R.N. Ravi ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...