- திருப்பரங்குன்றம்
- மதுரை
- ராம
- ரவிக்குமார்
- பரமசிவம்
- அரசுபாண்டி
- கார்த்திகேயன்
- எழுமலை, மதுரை மாவட்டம்
- சுப்ரமணிய சுவாமி கோவில்
- கார்த்திகை தீபம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி தீர்ப்பிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் மற்றும் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் உள்ளிட்டோர், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி மனு செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டிச. 1ல் வழக்கமான இடத்தை தவிர தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், மதுரை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், கோயில் நிர்வாகம் தொல்லியல் துறை அனுமதியுடன், போலீசார் பாதுகாப்புடன் கார்த்திகை மாதத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தனர். இந்நிலையில், டிச. 1ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்து ஐகோர்ட் கிளை பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் சார்பில் செயலாளர் ஆரிப்கான், தமுமுக மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், இம்மனுக்கள் காலாவதியாகி விட்டன. எனவே, தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
