முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு: குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தல்

 

சென்னை: முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் 10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 90,384 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 58,104 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 29ம்தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்த கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் முழுவதும் குளிரூட்டும் வசதி மற்றும் மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1638 சீருந்துகள் மற்றும் 1700 இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுவருகிறது. தற்பொழுது பொருட்காட்சி அரங்கம், மாநாட்டு மண்டபம் மற்றும் கலையரங்கத்தின் பார்வையாளர் மாடம், மேடைகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் வெளிப்புற பணிகளான சுற்றுச்சுவர், அணுகு சாலைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2026 நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பணிகளை தரமாகவும், விரைவாகவும், குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் எஸ். மணிவண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: