செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை (ECR), நெம்மேலியில் நீர்வளத் துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்தேக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 4,375 ஏக்கரில், 1.6 டிஎம்சி கொள்ளளவில், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமையவுள்ளது. சென்னை, புறநகர் குடிநீர் தேவையை நிறைவு செய்யும்.
மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உபவடிவ நிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர். இந்நிலையில், ரூ.342.6 கோடியில் 6வது புதிய நீர்த்தேக்க கட்டுமான பணிக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
* கோவளம் உபவடிநிலப் பகுதியில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானமதி, சிறுதாவூர், காளவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீர், உப்பளம் மற்றும் அரசுக்கு சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோகிலமேடு முகத்துவாரங்களில் கடலில் கலக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்புதிய நீர்த்தேக்கமானது சென்னை வடிநிலப்பகுதியில் உள்ள கோவளம் உபவடிநிலப் பகுதியில் அமையவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உள்ள 3010 ஏக்கர் உப்பளப் பகுதி உட்பட மொத்தம் 5161 ஏக்கர் அரசு நிலங்களில் அமைக்கப்படவுள்ளது.
தற்போது அப்பகுதியில் முட்டுக்காடு பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது கடல்நீர் உள்ளே வருகிறது. இவ்வாறாகவே கோகிலமேடு முகத்துவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிற்கு மட்டுமே பக்கிங்காம் கால்வாய் வழியாக உயர்ந்த அலையின் (High Tide) பொழுது பக்கிங்காம் கால்வாய் வழியாக கடல்நீர் உள்ளே வருகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்ந்து கடல்நீர் உள்வருவதில்லை. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் மழை நீர் மட்டுமே தேங்கி அதன்பின் கடலில் மெதுவாக கலக்கிறது.
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.
* நீர் பாதுகாப்பு விருதுகள்
மாமல்லன் நீர்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களான (NGO) – சிறு துளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, எச்.சி.எல். அறக்கட்டளை, தன் அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை, ரோப் நிறுவனங்கள், டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பிரிவு, அண்ணா பல்கலைக் கழகம் – நீர்வள ஆதார மையம். பிரதான் அறக்கட்டளை, வனத்துக்குள் திருப்பூர், கோவை குளங்கள், பயோட்டா மண் அறக்கட்டளை, தர்மபுரி – ஆதி அறக்கட்டளை ஆகிய அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை (Best Water Conservation Award) வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும். சிலர் உண்மை தெரிந்தும் சிலர் உண்மை தெரியாமலும் திமுக ஆட்சியில் அணைகள் கட்டவில்லை என்று பொய் சொல்வர். தமிழ்நாட்டில் நீர்நிலைகளை காக்கக் கூடிய திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றி வருகிறது. சிற்றாறு-1, சிற்றாறு-2, சாஸ்தாக கோவில், கடனா நதி, நம்பியாறு, சண்முகா நதி உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி குறித்த நேரத்தில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. ரூ.459 கோடியில் 24,833 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை நீர் செல்கிறது. வறட்சி பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளத்துக்கு 9 டிஎம்சி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெருகி வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மற்றுமொரு குடிநீர் தேக்கத்தை திராவிட மாடல் ஆட்சி அமைக்கிறது. சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவெடுத்துள்ளன சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றி புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. சென்னையை சுற்றி கூடுதலாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. திமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.செல்வம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
