×

இதுவரை 2.15 கோடி பேருக்கு வழங்கல்: விடுபட்டவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு வினியோகம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் நாளை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 24,924 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதற்காக சுமார் 50,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி இதுவரை 2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.6453.54 கோடி ரொக்கம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது குறுகிய நாட்களுக்குள் 97% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நாளை முதல் வழங்கப்படுகிறது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெறலாம் என்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nalam ,
× RELATED சென்னை பன்னாட்டு புத்தகக்...